சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து கிண்டி தொழிற்பேட்டை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத வாகனத்தின் பின்புறம் மோதி கார் விபத்துக்குள்ளானது. அங்கு இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் மேற்கொண்ட சோதனையில் காரின் உள்ளே ஓட்டுநர் மட்டும் இருந்ததும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த கார் ஓட்டுநர் சென்னை எழும்பூர் கங்குரெட்டி தெருவை சேர்ந்த முருகன் (47) என தெரிய வந்தது.