பூந்தமல்லியில் தண்ணீரை அகற்றும் மிதவை மோட்டார் சென்னை:மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மழைநீர் தேங்கிய பல்வேறு பகுதிகளில், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மழை நீர் வடிந்த நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தொகுதியில், புகுந்த வெள்ள நீரானது வடியாததால், இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை படகு மூலமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தை அகற்ற ஊராட்சி நிர்வாகம் சார்பில் 150 hp திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. எனினும் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. இதனால் தற்போது வரை 3 முதல் 8 அடி வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளம் ஏற்பட்ட மற்ற பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தங்களால், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை என்று புலம்புகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில், தற்போது 110hp திறனுக்கு 60 மற்றும் 50 HP திறன் கொண்ட 2 மிதவை மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த மிதவை மோட்டார் பொருத்தப்பட்டு இயங்கத் தொடங்கினால், இரண்டே நாளில் தண்ணீரை முற்றிலுமாக அகற்றிவிடலாம் என மோட்டார் ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:எண்ணூர் கச்சா எண்ணெய் கழிவு கசிவு விவகாரம்; புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு.. தனியார் குழு ஆய்வு!