சென்னை திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “கரோனா தொற்று, அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் ஊரடங்கு ஆகியவை காரணமாக மக்கள் பெரும் மன அழுத்தத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
சக மனிதர்களால் புறக்கணிக்கப்படுவதால், கரோனா தொற்று பாதித்தவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் கரோனா பற்றி, தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கரோனா குறித்த உண்மை தகவல்களை இணையதளங்களில் வெளியிட்டால் மட்டுமே மக்கள் மனதிலுள்ள அச்ச உணர்வைப் போக்க முடியும் என்பதால், இரவு 7 மணி முதல் 8 மணி வரையோ அல்லது 8 மணி முதல் 9 மணி வரையோ ஒரு மணி நேரம் அரசு, தனியார் தொலைக்காட்சிகளில் கரோனா குறித்த அறிவுரைகள், தடுப்பூசி, சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.