சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. பின் ஜூன் 28ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்கச் சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தன்னுடைய கணவரைச் சட்டவிரோதமாக அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர் என்று, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தொடர்ந்தார். அம்மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குச் செந்தில் பாலாஜியை மாற்றச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.
அதேசமயம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து 8 நாட்கள் விசாரிக்க அனுமதி கொடுத்துக் கடந்த ஜூன் 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜியை, கடுமையாக முறையில் மூன்றாம் தர விசாரணைகள் மேற்கொள்ளக் கூடாது என்றும், மருத்துவர்கள் அனுமதியுடன் விசாரணை செய்ய வேண்டும் என்றும். ஒருவேளை அனுமதிக்காத நிலையில் விசாரணை மேற்கொள்ளக் கூடாது என்றும். விசாரணையின் போது போதுமான இடைவெளிகள் வழங்க வேண்டும் என்றும். அமலாக்கத்துறை, மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனையும் செய்யலாம் என்றும். மேலும் விசாரணைக்குப் பின் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனைகளைச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்தது.