தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடில்லை: மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

By

Published : Oct 16, 2020, 10:36 PM IST

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 விழுக்காடு இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி, அரசு மருத்துவர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதிடுகையில், அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை, டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், இந்த படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வளவு இடங்களை நிரப்ப வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடம் ஒதுக்குவதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்துள்ளதால், மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details