தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது - கஞ்சா விற்பனை

துரைப்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

By

Published : Jul 27, 2022, 4:49 PM IST

சென்னை: துரைப்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக துரைப்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன் பேரில் ஆய்வாளர் செந்தில் முருகன், உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில், தலைமை காவலர் சுபாஷ் சந்திர போஸ், சுதாகர், முதல் நிலை காவலர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்வோரை கண்காணித்து பிடிக்க உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் துரைப்பாக்கம், இளங்கோ நகர் கெனால் அருகே கண்காணித்தனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் பைகளில் கஞ்சாவை மறைத்து வைத்து கல்லூரி மாணவர்கள் போல் வலம் வந்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் வைத்திருந்த நான்கு பைகளில் இருந்த 20 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் ரஞ்சித் (20), விக்னேஷ் (23), ஐடி ஊழியர் பரத் (22), கண்ணகி நகரைச் சேர்ந்த சூர்யா என்ற மண்டை சூர்யா (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மொத்தமாக சென்னையில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதில் சூர்யா மீது போக்சோ, அடிதடி, பொதுச்சொத்தை சேதம் விளைவித்தது உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர், நான்கு பேர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் காவல் துறையினர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தூக்க மாத்திரைகள் கடத்த முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details