சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமாக வகையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை கண்ட செவிலி ஒருவர் யாரை பார்க்க வேண்டும் என விசாரித்தபோது தெலுங்கில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் திடீரென அந்நபர் ஓட்டம் பிடித்ததால் மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த காவலாளிகள் துரத்தி அந்நபரை பிடித்தனர்.
தொடர்ந்து அவர் கொண்டுவந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்நபரை ராஜீவ் காந்தி மருத்துவமனை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிடிப்பட்ட அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தைச் சேர்ந்த கண்ணமா ராயுடு (37) என்பது தெரியவந்தது.
இவர் ஆந்திராவில் இருந்து 9 கிலோ கஞ்சாவை ரயில் மூலமாக கடத்தி வந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர் கொண்டு வந்த கஞ்சாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து ஒரு நபருக்கு கைமாற்றி விடும்போது செவிலி கண்களில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.