தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்த்தேர்வில் தகுதி பெறாத ஐந்து லட்சத்து 30 ஆயிரம் பேர்; தேர்வு முடிவிற்காக காத்துக்கிடக்கும் தேர்வர்கள்! - Chennai

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் ஐந்து லட்சத்து 30 ஆயிரம் பேர் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதே நேரத்தில் சில தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முற்றுகையிட்டனர்.

Candidates can not received Group 4 Exam Result are waiting in front of TNPSC office for Exam Result
குரூப் 4 தேர்வு முடிவு கிடைக்காத தேர்வர்கள் தேர்வு முடிவிற்காக டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் காத்துக்கிடக்கின்றனர்

By

Published : Mar 27, 2023, 2:58 PM IST

குரூப் 4 தேர்வு முடிவு கிடைக்காத தேர்வர்கள் தேர்வு முடிவிற்காக டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் காத்துக்கிடக்கின்றனர்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்கான, எழுத்துத் தேர்வு 2022ஆம்ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22,02,942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 18,36,535 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி, குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டது. தேர்வின் முடிவுகள் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது சந்தேகத்தை கிளப்பியிருந்த நிலையில் தற்போது வெளியான தேர்வு முடிவு மூலம் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் புகார்களை கிளப்பினர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற தேர்வு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு மனிதவள மேம்பாடு மற்றும் நீதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் கூறினார்.

இந்நிலையில் ஒரே பயிற்சி நிறுவனத்தில் பயின்ற 2 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்நிறுவனத்தின் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே பயிற்சி நிறுவனத்தில் பயின்ற 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதால், தேர்வில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய விதிகளின்படி தமிழ் மொழித்தேர்வில் ஒருவர் தகுதி பெற்றால் மட்டுமே அவரது பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும். இதன்படி தேர்வு எழுதியவர்கள் ஐந்து லட்சத்து 30 ஆயிரம் தேர்வர்கள் தமிழ் மொழித்தேர்வில் தகுதி பெறவில்லை. மேலும் மற்ற தேர்வுகளில் விடைத்தாள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றது குறித்து ஆணையத்தின் தலைவர் தான் தெரிவிக்க வேண்டுமென கூறினார்.

இதனிடையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தேர்வர்கள் சிலர் தங்களின் தேர்வு முடிவுகள் வரவில்லை என புகார் மனு அளிக்க வந்தனர். புகார் மனு அளித்த பின்னர் கூறும்பொழுது கடந்த நான்கு ஆண்டுகளாக குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வினை எழுதுவதற்காகப் படித்ததாகவும், தேர்வை நன்றாக எழுதியிருந்தோம் என்றும்; தங்களுக்கான தேர்வு முடிவுகள் வரவில்லை எனவும் குற்றம்சாட்டினர். மேலும் ஆணையத்தின் அதிகாரிகள் தங்களின் மனுக்களைப் பெற்றனர். இது குறித்து பத்து நாட்களில் தகவல்களை அளிப்பதாக கூறியுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வில் முறைகேடா? ஆடியோ வெளியிட்ட தேர்வர்கள்!

ABOUT THE AUTHOR

...view details