புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு 'லியோ' படம் பார்க்க ஏற்பாடு சென்னையில் உள்ள 'பில்ராத் மருத்துவமனை' கடந்த 30 வருடங்களாக புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் 'பிங்க் அக்டோபர்' என்பதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்டு வரவும், புற்றுநோய் ஒரு பயங்கரமான நோயல்ல என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் இறங்கி உள்ளது.
அந்த வகையில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் மற்றும் மருத்துவர்கள் குடும்பத்திற்கு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தினை காண இன்று (அக். 21) டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர் தீபா, சரிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் தீபா, "புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோயல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த கூடிய ஒன்றுதான். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் போது கூடிய விரைவில் குணப்படுத்த முடியும். மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் அதிகமான மக்கள் புற்றுநோயிலிருந்து குணமாகலாம்.
மேலும் புற்றுநோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்த நாளை (அக். 22) சென்னையில் உள்ள அனைத்து பிவிஆர் திரையரங்குகளிலும் விஜய் நடித்த லியோ படத்தைப் பார்க்க 4 ஆயிரத்து 500 டிக்கெட்டுகளை வழங்கி உள்ளோம். புற்றுநோயால் போராடி வருபவர்களுக்கு மட்டுமின்றி மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள், வார்டு உதவியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் படம் பார்க்க உணவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோயால் போராடி வருபவர்களுக்கு தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தெரியப்படுத்தினோம். அவரும் அப்படியா நல்ல விஷயம் என எங்களைப் பாராட்டினார். நடிகர் விஜய் தரப்பிற்கும் இந்த விஷயத்தை கொண்டு செல்ல முயற்சித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் புற்றுநோயால் போராடி வரும் சிலருக்கு லியோ படத்திற்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு 'லியோ' படம் பார்க்க ஏற்பாடு இதையும் படிங்க:இரண்டாவது நாளில் சரிந்த வசூல்.. ரூ.1,000 கோடி கிளப்பில் இணையுமா லியோ?