சென்னை: கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை 31.12.2021 வரை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (டிசம்பர் 13) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ' ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 30.11.2021 நாளிட்ட அறிவிக்கையின்படி, கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
- பண்டிகைக் காலங்களில், பொது மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு,
பொது மக்கள் நலன் கருதி, கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
* சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்குத் தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
* கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
* ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
மேலும், பின்வரும் செயல்பாடுகள், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
* அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
* தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்குச் செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டால் சேகர்பாபுவின் பழைய வரலாறு மறந்துவிடுமா?'