இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாட்டில் கோவிட்-19 அதிக வீரியம் கொண்ட 'க்ளேட் A13I' ஆக உருமாறி பரவிவருகிறது என்கிற தகவல் மக்கள் அனைவரையும் மேலும் அச்சப்பட வைத்துள்ளது.நோய்த்தொற்றைத் தடுப்பதிலும் - போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து தோல்வி அடைந்துவருகிறது அதிமுக அரசு.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வைக் கட்டாயம் நடத்தியே தீருவது என்கிற வறட்டுப் பிடிவாதமான முடிவு, மாணவ - மாணவியரின் உயிரை வைத்து ஆட்சியாளர்கள் விளையாடுகின்ற அபாயகரமான ஆட்டமாகும்.
கடந்த சில நாள்களாக குழந்தைகள், சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள் எனப் பல தரப்பினருக்கும் கரோனா நோய்த்தொற்று பரவிவருவதை அரசாங்கம் வெளியிடும் அறிக்கைகளிலிருந்தே அறிய முடிகிறது. அப்படிப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது என்பது, மாணவ - மாணவியருக்கு மட்டுமின்றி, அவர்களுடைய பெற்றோர், குடும்பத்தினர், உடன்பிறந்தோர் உள்ளிட்ட அனைவருக்கும் நோய்த்தொற்று பரவ காரணமாகிவிடும் என்பதை மருத்துவர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
பொதுத் தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டுவது, அதன் அக்கறையற்ற செயல்பாட்டையே எடுத்துக் காட்டுகிறது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வாங்குவதற்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பிலிருந்து பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் என அரசு சொல்கின்ற அனைத்துமே நோய்த்தொற்றுப் பரவலுக்கு வலிந்து இடமளிக்கின்ற செயல்பாடுகளேயாகும்.