சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து நேற்று (அக்.26) பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனமத்தை விதிமுறைகளின் படி வேந்தர் தான் நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மோடி கொண்டுவந்த சட்டம்: "தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநரிடம் இருந்து மாநில முதலமைச்சருக்கு மாற்றுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து எந்தவிதமான காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது. ஆளுநர் கையெழுத்து போட்டால் மட்டுமே, சட்டமாக அமல்படுத்த முடியும். குஜராத்தில் 2013ஆம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்தபோது 'வைப்ரன்ட் குஜராத்' என்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
பின்னர் 2013ம் ஆண்டில் ஆளுநரிடம் இருந்து வேந்தருக்கான அதிகாரங்களை எடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர், 2014 ஆம் ஆண்டில் பிரதமராக மோடி, பதவி ஏற்று டெல்லி வந்து விட்டார். பின்னர், குஜராத்தில் இயற்றப்பட்ட சட்டம் அப்படியே இருந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆளுநரை நியமனம் செய்திருந்தால், குஜராத்தில் இயற்றப்பட்ட துணைவேந்தர் நியமனம் சட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.
அரசே துணைவேந்தரை நியமனம் செய்கிறது:அதனைத்தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டில் ஓ.பி.ஹோலி என்ற பாஜக ஆளுநர் சென்ற பின்னர் தான், சட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். பின்னர் தான், குஜராத்தில் துணைவேந்தர்களை அரசே தான் நியமனம் செய்கிறது. ஆனால், வேந்தராக ஆளுநர் தான் தொடர்ந்து இருந்து வருகிறார். குஜராத்தில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு, 3 பேர் தேர்வு செய்து அளிக்கின்றனர். அவர்களில் இருந்து ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
இதேபோல, தமிழ்நாட்டில் அதே நடைமுறையை பின்பற்றினாலும், ஆளுநர் அவருக்கு வேண்டும் என்பவரை நியமனம் செய்வது தவறானது தான். தேடுதல் குழுவிற்கு ஆளுநர் குறிப்பிட்ட நபரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கூறினால், பாஜக இருந்தால் அக்கட்சியை சேர்ந்தவரையும், காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு வேண்டியவர்களையும், திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு வேண்டியவர்களையும் நியமனம் செய்வது தவறு தானே?
மாநில பட்டியலுக்கு திரும்புமா கல்வி? தேடுதல் குழுவினர் ஆளுக்கு ஒரு பெயரை எழுதினாலும், ஆளுநர் சார்பில் நியமிக்கப்படுபவர்கள் அவருக்கு வேண்டிய பெயரை எழுதினால், அந்த நபரை ஆளுநர் நியமனம் செய்துவிட போகிறார். தமிழ்நாடு அரசு, ஒரே ஒரு வழி தான் செய்ய முடியும். கல்வி தற்பொழுது பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் செயல்படுத்த முடியும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கல்வி பொதுப்பட்டியில் இருக்கும் வரையில் கஷ்டம் தான்.