தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தக்காளி மைதானத்தைத் திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்கத் தயார்' - தக்காளி மொத்த வியாபாரி சங்கம்

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் முறையீடு செய்துள்ளது.

MHC
MHC

By

Published : Nov 25, 2021, 1:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தக்காளி விலை அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சிவா என்பவர் முன்னிலையாகி முறையீடுசெய்தார்.

அப்போது, கரோனா பரவல் காரணமாக 2020 மே 5ஆம் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை மூடப்பட்டு, பின்னர் செப்டம்பர் 28ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. கோயம்பேடு சந்தையில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் உள்ளது.

இங்குதான் தக்காளி ஏற்றிவரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படும். கோயம்பேடு சந்தையை அரசு திறந்தாலும் இந்த மைதானத்தைத் திறக்கவில்லை. இந்த மைதானத்திற்கு தக்காளியை ஏற்றிவந்த 11 லாரிகள் வந்தபோது, லாரிகளை உள்ளே வைத்து மைதானத்தின் நுழைவு வாயிலை அலுவலர்கள் பூட்டிவிட்டனர்.

பல நாள்களுக்குப் பின்னர் தக்காளிகள் அழுகிய நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி லாரிகள் வெளியில் எடுக்கப்பட்டன. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றிவரும் வாகனங்கள் கோயம்பேடு சந்தைக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழ்நாட்டில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்த மைதானத்தைத் திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டுவந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். இதன்மூலம் தக்காளி விலை அதிரடியாகக் குறைக்க முடியும்.

கிலோ ரூ. 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழ்நாடு அரசுக்கு உதவ தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் தயாராக உள்ளது. எனவே நிலுவையில் உள்ள தக்காளி மைதானத்தைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சிவா கேட்டுக்கொண்டார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை நாளை (நவம்பர் 26) விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Tomato Price: குறைந்தது தக்காளி விலை - கிலோ எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details