சென்ற ஆறு மாத காலமாக சென்னை சித்தாலப்பாக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற பெயரில் கால் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த கால் சென்டரில் பொதுமக்களின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு கடன் கொடுப்பதாகவும் பல சேவைகள் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைக் கூறி பேசியுள்ளனர்.
அதன்பின் அவர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களைப் பெற்று அவர்களுடைய ஆவணங்களை வைத்து அவர்களுக்கே தெரியாமல் மோசடிக்காகப் பயன்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலருக்கும் அவர்களின் விவரங்களை வைத்து வங்கிகளில் கடன் வாங்கியிருக்கும் தகவல் கிடைத்தவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து தொடர்புடையவர்கள் அந்த கால் சென்டர் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், சித்தாலப்பாக்கத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த போலி கால்சென்டரில் அதிரடியாக சோதனை நடத்தினர்.