தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில் இன்று அமைச்சரவைக் கூடியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டவிதிகளின்படி மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான பிரதிநிதிகளை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இதை மாற்றி வார்டு உறுப்பினர்கள் மூலம் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவசரச்சட்டம் கொண்டுவர இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாமக, பாஜக, தேமுதிக, தமாகா போன்ற கூட்டணிக் கட்சிகள், அதிகமான மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளைக் கேட்டுவருவதால் இப்பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைமுகத் தேர்தல் நடைபெற்றால் எந்தக் கட்சிக்கு அதிகமான கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவரே மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவராக முடியும்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான 30 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேபோல், கடந்த ஜனவரி 23, 24ஆம் தேதிகளில் நடைபெற்ற, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.