முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டல அறிவிப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பிதற்குரிய சட்டச்சிக்கல் குறித்து ஆராயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட முன்வடிவை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கைத் தொடர்பான விவாதத்தின்போது இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவரும் நிலையில், தற்போது பாதுகாப்பு வேளாண் மண்டல மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.