தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , ‘புதுடெல்லியில் டிரான்ஸ்போர்ட் பவனில்‘ இன்று (12.10.2021) ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை, கொல்லேக்கால்-கனூர் சாலை, பழனி-தாராபுரம் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, மேட்டுப்பாளையம்-பவானி சாலை, அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானி-கரூர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும்.
சென்னை துறைமுக வளர்ச்சிக்கும், பெருகி வரும் நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 2 அடுக்கு உயர்மட்ட சாலை பணியை தொடங்க வேண்டும்
மதுரை மேற்கு சுற்றுவட்டச் சாலை, கோயம்புத்தூர் அரைவட்டச் சாலை, கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கையினை விரைவுப்படுத்தி விரைவில் பணி தொடங்க அனுமதிக்க வேண்டும். நான்கு வழிச்சாலையாக உள்ள சென்னை-கன்னியாகுமரி சாலையினை 8/6 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.
மக்கள் தொகை அடர்த்தியினாலும், கண்டெய்னர்கள் அதிகமாக செல்வதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சென்னை துறைமுகம் முதல் மணலி சாலை-திருவொற்றியூர் சந்திப்பு வரை ‘கடல் இணைப்பு பாலம்‘ அமைக்க வேண்டியதின் அவசியம்.
தமிழ்நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து, தெற்கு பகுதிக்கு செல்லும் சாலைகளும், கிழக்கு பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்கு செல்லும் சாலைகளும் மற்றும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளும் திருச்சிராப்பள்ளி வழியாக செல்வதாலும், பேருந்து முனையம் (BUS PORT) அமைக்க வேண்டியதின் அவசியம் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
மக்கள் தொகை அடர்த்தி, வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு ஆகியவற்றின் காரணமாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்துகளும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதனால், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும்.
திருச்சி முதல் துவாக்குடி வரை குறைவான நில எடுப்புடன் 15 கி.மீ. நீளத்திற்கு ரூ.1500 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கலாம். உயர்மட்ட சாலை அமைப்பது விபத்துகளை தடுப்பதுடன், கனரக வாகனப் போக்குவரத்து மற்றும் உள்ளூர் வாகனப் போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வாக அமையும் உள்ளிட்ட கோரிக்கைகளை எ.வ.வேலு வலியுறுத்தினார்.
இக்கோரிக்கைகள் தொடர்பாக, தனித்தனியாக ஒவ்வொரு கோரிக்கை குறித்தும், ஒன்றிய அமைச்சரிடம் கடிதங்களை கொடுத்து, அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டுமென எ.வ.வேலு கேட்டுக்கொண்டார். இதற்கு நிதின் கட்கரியும் கோரிக்கை அனைத்தையும் பரிசீலித்து விரைவில் ஆணைகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2030 ஆண்டுக்குள் 30% எலக்ட்ரிக் கார்கள் - நிதின் கட்கரி இலக்கு