சென்னை விருந்தினர் மாளிகை அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று தடையை மீறி தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை இஸ்லாமிய அமைப்பினர் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில், இஸ்லாமிய இயக்க0ங்கள், அரசியல் கட்சிகள் கூட்டமைப்புத் தலைவர் காஜாமைதீன் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர்மொய்தீன், எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் நெல்லை முபாரக், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மத் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும், இந்தப் போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைசாமி, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், வீரபாண்டியன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்பட 39 அமைப்புகளின் தலைவர் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் இந்தப் போரட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஆண்கள், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டத்தில் எந்தவித அசாம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க சென்னை முழுவதும் 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்ட 39 அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட 11 ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி காவல் துறையினர் சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், தடையை மீறி போராட்டம் நடத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்