திரைப்படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் சி. சத்யா, முதன்முறையாக இசை காணொலி ஒன்றை (தனியிசை ஆல்பம்) உருவாக்கியுள்ளார். 'போகாதே' என்று தலைப்பிடப்பட்டுள்ள இதில் அம்மு அபிராமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இயற்கையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தி அன்பை விதைக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு வெளியான 'தீதும் நன்றும்' திரைப்படத்தை இயக்கிய ராசு ரஞ்சித் 'போகாதே'வை இயக்கியுள்ளார்.
லாவரதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பிரபல இந்தி பாடகரும் சல்மான் கான் நடித்த பாலிவுட் பிளாக்பஸ்டரான ரேஸ் 3இன் இசையமைப்பாளர்களில் ஒருவருமான ஷிவாய் வியாஸ் இப்பாடலைப் பாடியுள்ளார்.
ஆல்பத்தில் தடம் பதித்திருப்பது குறித்து சத்யா கூறுகையில், "ரசிகர்களின் வேண்டுகோள்களே இதற்குக் காரணம். என்னை ஆல்பம் செய்யச் சொல்லி சமூக வலைதளப் பக்கங்களில் அவர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 'போகாதே' அமைந்துள்ளது.” என்றார்.