நாங்குநேரியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச். வசந்தகுமார் 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாகத் தேர்வானார். இதனால் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ய, அத்தொகுதியும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த கே. ராதாமணி (திமுக) உயிரிழந்ததால் அத்தொகுதியும் காலியாகின. இதையடுத்து இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
தலைநிமிரவைத்த தமிழ்நாட்டு வாக்காளர்கள்! - தமிழ்நாடு இடைத்தேர்தல்
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மீண்டும் தமிழ்நாட்டு மக்கள் அதிகளவு வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதேபோல நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டனர்.
விக்கிரவாண்டியில் 84.36 விழுக்காடு, நாங்குநேரியில் 66.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனை தவிர்த்து புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் 69.44 வாக்குகள் பதிவாகியுள்ளன. எப்போதும்போல மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகியுள்ளது. இந்த இடைத்தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.