தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2023ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு அரசு 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் - அமைச்சர் சி.வி.கணேசன்

தமிழ்நாடு அரசு 1,42,804 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தந்துள்ள நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை இரண்டு லட்சமாக உயர்த்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 29, 2023, 11:01 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் 07.05.2021 முதல் 26.03.2023 வரை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் 95 மிகப்பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் (Mega Job Fair) நடத்தப்பட்டு, 1,42,804 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தந்துள்ளது. இந்த எண்ணிக்கையை இந்தாண்டு இறுதிக்குள் இரண்டு இலட்சமாக உயர்த்துவோம் எனவும் உறுதிபடக் கூறினார்.

கடந்த 15.10.2022ஆம் தேதி முதலமைச்சர் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கியதுபோல், இந்தாண்டு இறுதிக்குள்ளாக இரண்டு லட்சமாவது பணி நியமன ஆணையையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேபோல், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெற வேண்டும் எனும் நோக்கத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையங்கள் வாயிலாக 42 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதுவரை 93,218 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

தொழில் தகராறுகளை சமரசம் செய்து சுமூகத் தீர்வை காணும் பணி சமரச அலுவலகம் ஒப்படைக்கப்பட்டு 01-04-2022 முதல் 31-12-2022 வரையிலான காலத்தில் 2178 தொழில் தகராறுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் தொழிலாளர்களுக்கும் இடையே தீர்வு தொகை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன் வாயிலாக 2592 தொழிலாளர்கள் ரூபாய் 1296 கோடி அளவில் பயன்பெற்றுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டத்தின்படி, பதிவு மற்றும் புதுப்பித்தல் மற்றும் உரிமைக் கட்டணமாக 95,10,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2022ஆம் ஆண்டில் 2,90,496 இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு முத்திரை கட்டமாக ரூபாய் 52.66 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுவதிலே தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. மேலும் 285 குழந்தை வளரிடும் பருவத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிய கணக்கெடுப்பு நடத்த செயல் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: S.E.T.C பேருந்துகளில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 50% கட்டணச் சலுகை - வெளியான சூப்பர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details