சென்னை:தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க கடை தெருகளில் குவிந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசும் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட பல்வேறு முன்னெற்பாடுகளை செய்துள்ளது.
அந்தவகையில் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஆறு இடங்களிலிருந்து 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தீபாவளி முடிந்து திரும்ப 17 ஆயிரம் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் இனிப்புகள்
பண்டிகை நாள்கள் என்றாலே இனிப்பு முக்கியம் பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவினில் புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களையும் தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் இனிப்புகள் வாங்க கூறியுள்ளார்.
இன்று(அக்.26) தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில், தீபாவளி பண்டிகை, துறை சார்ந்த ஆய்வு கூட்டங்களுக்கு ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். இது பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் அமையும். துறை சார்ந்த கூட்டங்களுக்கும் வெளியில் இனிப்பு வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
ஆவின் நிறுவனத்தில் 41 லட்சம் லிட்டர் பால் தினசரி கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 27 லட்சம் லிட்டர் பால், பால் பாக்கெட்டுகளாகவும், மீதம் தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்டவைகளாக விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு புதிய வகை இனிப்புகள் ஆவினில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை