சென்னை: சூளைமேடு, இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (52). இவர் ஆர்கே கன்ஸ்டர்கசன் என்ற பெயரில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளார்கள்.
நேற்று இரவு அவரது மகன் ஸ்டீபன்ராஜின் மனைவி சுஜிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் சுஜிதாவை விஜயா மருத்துவமனையில் சேர்த்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கேயே இரவு தங்கியுள்ளனர்.
சுரேஷ்குமார் வீட்டில் இரவு ஏசி அறையில் படுத்து தூங்கி இருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த அறையில் இருந்து புகை வரவே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கீழ்பாக்கம் மற்றும் கோயம்பேடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்துள்ளது. மேலும் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷ்குமார் உடல் கருகி சடலமாக கிடந்துள்ளார். உடலை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மகனுக்கு குழந்தை பிறக்க போகும் சந்தோஷத்தில் இரவு மது அருந்தி விட்டு அறையை தாளிட்டு ஏசி அறையில் சுரேஷ்குமார் தூங்கியுள்ளார். ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அறை முழுவதும் தீ பரவியதில் அவர் தீயில் கருகி உயரிழந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மின்வாரிய ஊழியர்களை அழைத்து சோதனை மேற்கொள்ள கூறி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் சாலையில் நிறுத்தியிருந்த காரில் பற்றிய தீ!