சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர் கடத்தல் விவகாரத்தில் பயங்கரவாதி தவ்ஃபீக் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலர் போல் நடித்து கடத்தியது தெரியவந்தது. தொழிலதிபர் அக்பர் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, என்ஐஏ அலுவலர் போல் நடித்து பணத்தைப் பறித்துள்ளார். இந்நிலையில், இந்த தவ்ஃபீக் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த தவ்ஃபீக்?
தவ்ஃபீக் மீது 14க்கும் மேற்பட்ட வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 2002 முதல் 2008ஆம் ஆண்டு வரை பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தார். குறிப்பாக 2002இல் மும்பையில் பேருந்தில் குண்டு வைத்தது தொடர்பாக, இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதன்முறையாக உத்தரப்பிரதேசம் நொய்டாவில் கைது செய்யப்பட்ட தவ்ஃபீக் 2015ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு சிறையில் இருந்து வெளியான தவ்ஃபீக் 'நாம் மனிதர் கட்சி', என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்தார்.