சென்னை: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியிலிருந்து வரும் நரிக்குறவர்கள் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஊசி பாசி மணி விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் மாலை நேரத்தில் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி வள்ளியூர் செல்கின்றனர்.
வழக்கம் போல் டிசம்பர் 9 ஆம் தேதி முதியவர், பெண்மணி, குழந்தை ஆகிய மூன்று பேர் வள்ளியூர் செல்ல பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது முதியவர், பெண்மணி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் பேருந்தில் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று பேரையும் பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கி விட்டுள்ளார். அத்துடன் அவர்களின் உடைமைகளையும் தூக்கி வீசியுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.