நிவர் புயலை முன்னிட்டு 7 மாவட்டங்களில் நாளை(நவ.24) நண்பகல் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்படுகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிதாக உருவாகியுள்ள நிவர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வரும் 24ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும் 25ஆம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையைக்கடக்கும்போது மிக கனமழையுடன் 120 கி.மீ. வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனை எதிர்கொள்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
- புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கவேண்டும்.
- நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல்பாத்திரங்கள் உள்ளிட்டவை வசதிகள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும்.
- பெரிய ஏரிகளின் நீர் கொள்ளவு, பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.