சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுவதை அடுத்து வீரம் வாய்ந்த முக்கிய விளையாட்டான ஜல்லிக்கட்டும் அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை மாடுகளின் உரிமையாளர்கள் இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் மாடுகளுக்கு தீவிரப் பயிற்சிகளை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படும் மாவட்டங்கள்: தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருந்தாலும், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இதர மாவட்டங்களிலும் இந்தப் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன.
மேலும் சுமார், 450 முதல் 500 இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மொத்தம் இரண்டு லட்சத்திற்கும் மேல் காளைகள் உள்ளன. எனினும், போட்டிகள் நடைபெறும்போது சுமார் 35,000 காளைகள் அனைத்து இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கும் என்கின்றனர், காளைகளின் உரிமையாளர்கள்.
காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறை:பொதுவாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நெருங்கும்போது காளைகளுக்கு சிறப்பு மற்றும் தீவிரப் பயிற்சிகள் அளிக்கப்படுவது உண்டு. குறிப்பாக நீச்சல், நடை உள்ளிட்டப் பயிற்சிகள், கொம்புகளை பலப்படுத்துவதற்காக மண்ணில் குத்துதல் போன்ற பயிற்சிகள் காளைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர், அ. கண்ணதாசன் (என்கிற) சிவப்பட்டி கண்ணன், நம்மிடம் கூறுகையில், "காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அரை மணி நேரத்திலிருந்து முக்கால் மணி நேரம் வரை கொடுக்கப்படுகிறது. இதே போல காலை வேளையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி கொடுக்கப்படும்.
இந்த வகையான பயிற்சிகள் கொடுக்கும்போது உடலின் சக்தி அதிகரிக்கக் கூடும். மேலும் போட்டியின்போது களத்தில் உள்ள வீரர்கள் வாடி வாசலிலிருந்து காளைகள் வெளியே வரும்போதே, அவர்களை எதிர்கொண்டு பிடிபடாமல் வெளியேறும்", என்றார். ’காளைகளை மாலையில் வயல்வெளிகளில் அல்லது திறந்த வெளிப்பகுதியில் பெரிய கயிற்றின் மூலம் கட்டி வைப்போம்’ என்றார்.