சென்னை:அண்ணாப் பல்கலைக் கழகம் மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஆகியவை இணைந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், பிஎஸ்என்எல் தலைமை மேலாண்மை இயக்குநர் பிரவின் குமார் பூர்வர் ஆகியோர் நேற்று (டிச.27) கையெழுத்திட்டனர்.
இது குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் பேசிய துணைவேந்தர் வேல்ராஜ், 'அண்ணா பல்கலைக் கழகம் பிஎஸ்என்எல் இணைந்து மாணவர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பினை அளிக்க உள்ளோம். இதன் மூலம் கம்யூனிகேஷன் துறையில் உள்ள மாணவர்களின் திறன் வளர்க்கப்படும். கடந்த 30 வருடங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கம்யூனிகேஷன் வளர்ச்சியும் முக்கிய காரணம்.
வரும் 10 ஆண்டுகளில் 5ஜி வளர்ச்சி (5G) அதிகளவில் இருக்கும். இதனால் தான், ஆர்ட்டிபிசியல் இன்டிலிஜென்ட் (AI _Artificial Intelligence), இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் (Internet of Things) போன்ற பெரிய துறைகளிலும் வளர்ச்சி இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய கிராமங்களிலும் கம்யூனிகேஷன் தொடர்பு ஏற்படுத்துவதற்கு பிஎஸ்என்எல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு இது குறித்த திறனை வளர்க்கவும் குறுகிய கால சான்றிதழ் படிப்பும் அளிக்கப்பட உள்ளது.
Wifi வசதி:அண்ணா பல்கலைக் கழக வளாகம் வைபை வசதிக் கொண்டதாக மாற்றப்பட உள்ளது. கல்விக்கு அடிப்படையாக தற்பொழுது தகவல் தொழில்நுட்பம் தேவையாக உள்ளது. நகர்ப்புறங்களில் தனியார் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தை அளிக்கின்றன. கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் தான் உள்ளது' என்று தெரிவித்தார்.