சென்னை:காற்று மாசுவை குறைக்கும் நோக்கில், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிதாக விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் வாகனங்கள் பிஎஸ்-6 இன்ஜினை கொண்டிருக்க வேண்டும் என்றும், பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்களைப் பயன்படுத்தவோ, பதிவு செய்யவோ கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இதனால் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயார் செய்த பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்கள் தேக்க நிலையை அடைந்தன.
இந்நிலையில் தேக்கமடைந்த பல பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ அலுவலகங்களில் முறைகேடாக பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் போக்குவரத்து துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்கள் 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது போல முறைகேடாக பதிவாகியிருந்தது தெரியவந்தது.