சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.29), பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் படுகொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதேபோல் நெல்லை அம்பாசமுத்திரத்தில் குற்றவாளிகளின் பல்லை பிடுங்கிய காவல்துறை அதிகாரி பல்பீர் சிங் குறித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி முத்து உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
இதற்கு பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது, "அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் 5 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் இறந்ததாக தெரிய வருகிறது. அவரது மனைவி சுமலதா கொடுத்த புகார் அடிப்படையில் செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணையில் கொலையான இளங்கோவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் என்பவரை பொதுவெளியில் வைத்து தாக்கியதாகவும், இது தொடர்பாக முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் வழக்கில் தொடர்புடைய கணேசன், வெங்கடேசன், அருண்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களின் ஒருவர் இளைஞ்சிறார். புலன் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.