சென்னை அயோத்தியா நகர் 29ஆவது பிளாக்கில் வசிப்பவர் சக்திவேல்(48). இவருடைய இளைய சகோதரர்கள் ஞானவேல்(45) , கந்தவேல்(37) ஆகியோர் ஆவர். சக்திவேல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
இவர்கள் மூன்று பேருக்கும் சொந்தமான இரண்டு வீடுகளை, பிரிக்கும் விவகாரம் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு வீட்டில் திருமணமாகாத சக்திவேலும், மற்றொரு வீட்டில் ஞானவேல், கந்தவேல் ஆகிய இருவரும் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
சக்திவேல் குடிபோதையில் அடிக்கடி தனது சகோதரர்கள் இல்லத்திற்குச் சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதேபோல் இன்றும் சக்திவேல் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ஞானவேல், கந்தவேல் ஆகிய இருவரும் குடிபோதையில் இருந்த சக்திவேலை ஆக்ஸா பிளேடால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, வி.ஆர்.பிள்ளை தெரு வழியாக தப்பி சென்றுள்ளனர்.
சக்திவேலை கொலை செய்த ஞானவேல், கந்தவேல் இது குறித்து தகவலறிந்த ஐஸ் அவுஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திவாகர் தலைமையிலான குழு, லாயிட்ஸ் சாலை சந்திப்பில் உள்ள வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் வைத்து இருவரையும் கைது செய்து, மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சக்திவேல், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மெரினா காவல் நிலையத்தில் சகோதரர்கள் இருவரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பாலியல் வன்புணர்வு செய்து பள்ளி மாணவி கொலை - போக்சோவில் இளைஞர் கைது!