சென்னை:மாங்காடு, வடக்கு ரகுநாதபுரம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (48). இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்பிரசாத் (22) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இளைய மகன் யுவன் சங்கர் ராஜா (20) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (டிச.03) மாலை யுவன் சங்கர் ராஜாவின் நண்பரான அதே பகுதியில் வசிக்கும் மனோஜ் (20), யுவன் வீட்டிற்கு வந்துள்ளார். முதல் தளத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல் கதவை நகர்த்திய போது எதிர்பாராத விதமாக அந்த வழியாகச் சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மனோஜ் கை பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி அலறிய மனோஜின் சத்தம் கேட்டு அவரை காப்பாற்றுவதற்காக வந்த மதன் பிரசாத் மற்றும் யுவன் சங்கர் ராஜா மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. மூன்று பேரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, தாய் ஈஸ்வரி காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கிய நிலையில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் இருந்த நான்கு பேரையும் மீட்டு உடனடியாக வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நால்வரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மதன்பிரசாத், யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.