சென்னை: இரும்பை அடுத்த ஆரோவில் பகுதியில் உள்ள யந்த்ரா சமூகத்தில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தம்பதியின் வீட்டில் பழங்கால சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று நேற்று (நவ. 7) அவர்களது வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றனர்.
அப்போது, ஜெர்மன் நாட்டு தம்பதியான பாப்போ பிங்கல் மற்றும் மோனா பிங்கல் ஆகியோர் போலீசாரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை மீறி போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்திய போது சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை. மீண்டும் சோதனை வேட்டை நடத்திய போது, ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போல வீட்டின் முதல் தளத்திற்கு செல்லக்கூடிய படிக்கட்டுகள் மறைத்து கட்டப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் முதல் தளத்தில் உள்ள படுக்கையறையின் மேல் மாடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பழங்கால வெண்கல சிலைகளை போலீசார் கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட நடராஜ், அம்மன், சந்திரசேகரர் ஆகிய மூன்று சிலைகளுக்கு முறையான ஆவணங்கள் எதுவும் தம்பதியிடம் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.