தமிழ்நாட்டிலுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி நிறுவன உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக் கூலியை உயர்த்துதல், வளர்ப்புக்கூலி கணக்கிடும் முறைகளைச் சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி
தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை. கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் சங்க பிரதிநிதிகளுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை
செயலாளர் கோபால் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஞானசேகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள், கறிக்கோழி வளர்ப்பு
பண்ணையாளர்களுக்கு குறைந்தபட்ச வளர்ப்புத்தொகையான ரூ.3.50லிருந்து ரூ.6ஆக
உயர்த்தி வழங்கவும் மற்றும் 2000-க்கும் குறைவாக கறிக்கோழிகள் வளர்க்கும் சிறுபண்ணையாளர்களுக்கு கோழி ஒன்றுக்கு ரூ.1(ரூபாய் ஒன்று) வீதம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கவும் இருதரப்பினராலும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளப்பட்டது.