சென்னை:திருமண சான்று வழங்க இராண்டாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், பெண் சார் பதிவாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவல்லிக்கேணியை சேர்ந்த விமானி அகமது சுபைர் 2015ஆம் ஆண்டு திருமண சான்றிதழுக்காக திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, பணியில் இருந்த சார் பதிவாளர் வைதேகி 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதலின் படி, லஞ்ச பணத்தை கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் வைதேகியை ஆதாரத்துடன் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை முன்பு நடந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், லஞ்சம் பெற்ற குற்றம் மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்ததோடு அதை ஏக காலத்தில் அனுபவிக்கவும், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க :சேலம் அரசு மருத்துவமனை நோயாளிகள் வார்டில் இறந்தவர் உடல்.. துர்நாற்றம் வீசுவதால் தொற்று பரவும் அபாயம்!