விழுப்புரம்: செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றியபோது, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னை வேலையில் சேர்த்துக்கொள்ள போக்குவரத்து துறைக்கு உத்தரவிட வேண்டும் என பாலசுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 2018-ம் ஆண்டு தபால் மூலம் ஒரு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவுடன் 10 ஆயிரம் ரூபாயையும் அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர், நீதி பரிபாலனத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், சாதகமான உத்தரவைப் பெற தலைமை நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கூறி பாலசுப்பிரமணியன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி, அவரது தரப்பில் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.