வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளை1 - தங்க நகை கொள்ளை
சென்னை: தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் இ.பி காலனி பகுதியில், ஓய்வுப்பெற்ற சுகாதார ஆய்வாளர் ரங்கநாதன் (70), அவரது மனைவி சுகுணாவுடன் (56) வசித்து வருகின்றார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட்.2) பழந்தண்டலத்தில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று (ஆகஸ்ட்.3) காலை வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 15 சவரன் தங்க நகையும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து பெருங்களத்தூர் பீர்கங்கரணை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.