சென்னை: குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகள் சுவேதா (25), தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று (செப். 23) கல்லூரி அருகேவுள்ள ரயில் நிலையம் செல்லும் வழியில் சுவேதாவிற்கும், திருக்குவளை பகுதியைச் சேர்ந்த அவரது காதலன் ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதத்தில் கழுத்தை அறுத்த காதலன்
இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென சுவேதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுவேதா உயிரிழக்க, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நடந்த சம்பவம் குறித்து உடனடியாக சேலையூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.