சென்னை:மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (47). இவருடைய மகன் விஷ்ணு (16) வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி அன்று பள்ளிக்குச் சென்ற விஷ்ணு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவிலை.
இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுவின் தந்தை, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பள்ளியின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் மடிப்பாக்கம் ராமநகர் பேருந்து நிலையம் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றி தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், காணாமல் போன சிறுவன் விஷ்ணு, ஜனவரி 2ம் தேதி மாலை 4 மணி அளவில் ராம் நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது. மேலும் எம்ஜிஆர் ரயில் நிலையம் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சிறுவன் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது கண்டுபிடிக்கப்பட்டது.