சென்னை: குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகள் சுவேதா (25) தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று (செப். 23) கல்லூரி அருகேவுள்ள ரயில் நிலையம் செல்லும் வழியில் சுவேதாவிற்கும் திருக்குவளை பகுதியைச் சேர்ந்த அவரது காதலன் ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபரீதமாக மாறிய ரயில் சிநேகம்
இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென சுவேதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதையடுத்து அவரும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்டு பொதுமக்கள் சேலையூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்த காவலர்கள், பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற ராமச்சந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சுவேதா திருச்சிக்கு ரயிலில் பயணம் செய்தபோது ராமச்சந்திரனிடம் நட்பாகி, தொலைபேசி எண்ணைப் பரிமாறிக் கொண்டு பழகிவந்தது தெரியவந்தது.
சுவேதாவின் பெற்றோருக்கு இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததால், அவரைக் கண்டித்துள்ளனர். இதையடுத்து கடந்த நான்கு மாதங்களாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுவந்துள்ளது.
உறவினர்கள் போராட்டம்
இந்நிலையில் ராமச்சந்திரன் நேற்று (செப். 23) கடைசியாக சுவேதாவைப் பார்க்க வேண்டுமென்று கூறி, அவரை அழைத்து தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென சுவேதாவின் கழுத்தை அறுத்து கொலைசெய்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
மாணவியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவேதாவின்ன் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றுதிரண்டு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் என்று காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்தும்விதமாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: மாணவிக்கு கத்திக்குத்து: காதலன் தற்கொலை முயற்சி