சென்னை:நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 16) 45ஆவது புத்தகத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில் அது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டாகச் செய்தியாளரைச் சந்தித்தனர்.
அப்போ பேசிய அவர்கள், "45ஆவது புத்தகத் திருவிழாவை வரும் 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார். மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழா, நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும்.
தொடக்க நாளில், கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் முதலமைச்சர் வழங்கவுள்ளார். கரோனா கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி புத்தகத் திருவிழா நடைபெறும். புத்தகம் வாங்க வரும் வாசகர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்காகச் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.
மொத்தம் 800 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 500 பதிப்பாளர்களின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பதிப்பாளர்களின் புத்தகங்களும் இதில் இடம்பெறும். வழக்கம்போல், புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு விலை சலுகை வழங்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி.