சென்னை:46ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த ஆறாம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரம் அரங்கங்கள், 2000-க்கும் மேற்பட்ட தலைப்புகள், நித்தம் ஒரு கருத்தரங்கம் என நடைபெற்ற சென்னை புத்தகத் திருவிழா இன்றோடு முடிவடைந்தது. 17 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்ததாக பபாசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பபாசி தலைவர் வைரவன், 'சராசரியாக 1 லட்சம் வாசகர்கள் நாள்தோறும் வந்துள்ளனர். 17 நாட்களில் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். கடந்த வருடம் 10 லட்சம் பேர் வந்தனர். 16 கோடிக்கும் மேல் புத்தகம் விற்பனை ஆனது' என்றார்.
சர்வதேச புத்தகக் கண்காட்சி மூலம் 160 புத்தகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது தமிழ்ப் பதிப்பு மற்றும் எழுத்து உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
’உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க அடுத்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும். 46வது புத்தகக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 30 மாவட்டங்களில் இதுவரை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படும்’ எனவும் தெரிவித்துள்ளனர். நிரந்தர புத்தக கண்காட்சி உறுதியாக இந்த ஆண்டுக்குள் நிறைவேறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்திரா காந்தி சிலையில் ஏணி அகற்றம்; கண்டனம் தெரிவித்து நடைபயணம் சென்ற காங்கிரசார் கைது