சென்னை:முருகன் கோவிலை தரிசனம் செய்ய விரும்பும் முருக பக்தர்களுக்காக ஒருநாள் ஆன்மீக சுற்றுலாவை அறிமுகம் செய்கிறது தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம். ஒரே நாளில் 5 பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் முருகன் திருக்கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ன் படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பேருந்து கந்தகோட்டம் முருகன் திருக்கோவில், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், சிறுவாபுரி பாலமுருகன் திருக்கோவில், வடபழனி தண்டாயுதபாணி திருக்கோவில், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய கோவில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
சென்னையில் அருள்மிகு முருகன் திருக்கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம்-2ன் படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பேருந்து வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்றத்துர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில், திருவான்மியூர்- அறுபடை வீடு திருக்கோவில், மருந்தீஸ்வரர் திருக்கோயில் ஆகிய கோவில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முருகன் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. முருகன் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்" என்று தெரிவிக்கபட்டு உள்ளது.
இதையும் படிங்க:செயற்கை நுண்ணறிவு மூலம் கூகுளில் பொருட்கள் விற்பனை... சிறு, குறு வியாபாரிகளை ஊக்குவிக்க கூகுள் திட்டம்!