தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2020, 12:18 AM IST

ETV Bharat / state

'அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க பாமக ஆட்சிக்கு வர வேண்டும்' - ராமதாஸ் பேச்சு!

சென்னை: அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என நூல் வெளியீட்டு விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதிய ’சுக்கா...மிளகா...சமூகநீதி?’ என்ற நூல் வெளியீட்டு விழா இணையவழியில் நேற்று (செப்.17) நடைபெற்றது. ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் தீரன் நூலை வெளியிட்டார், தட்டானோடை செல்வராஜ் அதனைப் பெற்றுக் கொண்டார்.

நூல் வெளியீட்டு விழாவில் பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ,பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராமதாஸ், " சமூகநீதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் எப்படியெல்லாம் ஏமாந்திருக்கிறோம், எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ’சுக்கா...மிளகா...சமூகநீதி’ என்ற இந்த நூல், பைபிள், குரான், கீதை போன்ற நூல்களின் வரிசையில் போற்றப்பட வேண்டியது. வன்னியர்கள் அனைவரது வீடுகளிலும் இந்த நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், கல்வியில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது ஆகியவை குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை, உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

இடஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகளாக நாம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினோம். ஆனால், அப்போதிருந்த ஆட்சியாளர்கள் நம்மை அழைத்துப் பேசுவதற்குக்கூட தயாராக இல்லை. இன்று வரை அதேநிலை தான் நீடிக்கிறது. வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இந்தக் கோரிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, நான், மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுகுறித்து இன்றுவரை அரசாங்கம் நம்மை அழைத்துப் பேசவில்லை. இன்னும் எத்தனை நாள்களுக்குத் தான் இப்படி நாம் கேட்டுக்கொண்டே இருப்பது? தமிழ்நாட்டில் மக்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை மாறும். கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ வேண்டும். அதற்காக பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு மக்கள் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பான பல திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றைத் தொகுதி அளவிலும், கிராம அளவிலும், வீடுவீடாகவும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலம் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :'சூர்யாவின் பேச்சு தற்குறித்தனமானது' - ஜீவஜோதி

ABOUT THE AUTHOR

...view details