சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation) நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட ஆயில் சேகரிக்கப்பட்டு, லாரியின் மூலம் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கம்போல் இன்று (டிச.28) அங்கு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பாய்லர் டேங்க் ஒன்றில் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிர்ச்சடைந்த ஊழியர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த பன்னீர் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு ஊழியர்களையும் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் பாய்லர் டேங்க் வெடித்த சத்தம் கேட்டதில், வெளியில் இருந்த பொதுமக்களும் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து, தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வாயிலரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தண்டையார்பேட்டை போலீசார், வேறு யாருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா? விபத்துக்கு காரணம் என்ன? பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாயிலர் டேங்கில் எவ்வாறு கசிவு ஏற்பட்டு வெடித்தது என்பது குறித்து அந்த நிறுவனத்தில் அலுவலர்களும் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எண்ணூர் அமோனியா வாயு கசிவு: அனைத்து ஆலைகளிலும் தணிக்கை மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!