சென்னை:கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர், ராஜேந்தின் மணி(50). இவரது தந்தை குத்துச்சண்டை வீரராக இருந்த நிலையில் தானும் 14 வயது முதல் உடற்பயிற்சி மேற்கொண்டு, உடலைக் கட்டுக் கோப்பாக்கி பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்றார்.
அதே வேளையில் விமானப்படையில் கடை நிலை ஊழியராகப் பணியாற்றிவரும்போது பல்வேறு 'பாடி பில்டர்' போட்டிகளில் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து திருமணதிற்குப் பிறகும் பாடி பில்டிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார், ராஜேந்திரன் மணி. அவர் மனைவி கொடுத்த ஊக்கத்தால் தேசிய அளவில் 14 முறை இந்திய ஆணழகன் பட்டமும், ஆசிய அளவில் 3 முறை ஆணழகன் பட்டமும் வென்றார்.
மேலும், உலக அளவில் 2013ஆம் ஆண்டு முதல்முறையாக ஆணழகன் பட்டம் வென்ற ராஜேந்திரன் மணி, அதன்பிறகு உலக அளவில் நடைபெற்ற போட்டிகளில் ஐந்து முறை ஆணழகன் பட்டம் பெற்றுள்ளார். தற்போது 50 வயதை நெருங்கும் நிலையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் 44 நாடுகளில் இருந்து பங்கேற்ற வீரர்களுடன் அதிக எடைப்பிரிவில் பல சுற்றுகள் போட்டியிட்டு, வெற்றி பெற்று இந்திய நாட்டுக்கு பெருமையைத் தேடி தந்து, நமது தேசியக் கொடியை முதுகில் போர்த்தி நாட்டிற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடே பெருமை கொள்ள வைத்தார்.
இந்நிலையில், இன்று(டிச.14) சென்னை வந்தடைந்த ராஜேந்திரன் மணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு - சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரை நேரில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.