தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 22, 2020, 4:59 PM IST

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதலாக நிவாரண நிதி: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை: கரோனா நிவாராண நிதியில் சாதாரண மக்களுக்கு வழங்கும் தொகையிலிருந்து 25 விழுக்காடு கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai HC
chennai HC

கண் பார்வையற்றோருக்கான தேசிய கூட்டமைப்பு, டிசம்பர் 3 இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அரசு வேலைவாய்ப்பில், அவர்களுக்கு நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், சாதாரண மனிதர்களுடன், மாற்றுத்திறனாளிகளை ஒப்பிட முடியாது எனவும், அவர்களுக்கு அதிகளவில் அடிப்படை தேவைகள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி போதுமானதல்ல எனவும், மத்திய, மாநில அரசுகள், கரோனா தடுப்புக்காக பொதுமக்களிடமிருந்து வசூலித்துள்ள நிதியில் சாதாரண மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட கூடுதலாக 25 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்குக் கொடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.டி. ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details