சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சனம் செய்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, பேட்டியில் ஊழல் காலம் என்று சொல்லப்பட்டால் 1991 முதல் 1996 வரையிலான காலம் அதீத மோசமான ஊழல் நிரம்பப்பட்டது என ஒப்புக்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப் பட்டதற்கு, தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுதியுடைய ஆட்சிகள் என்றும், பல தலைவர்கள் ஆட்சியின் போதே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும், பதிலளித்தார். இந்த பதில் அதிமுகவினரிடையே காட்டு தீ போல் பரவி கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கொழுந்து விட்டு எரிந்தது.
இதனை கண்டிக்கும் வகையிலும் தமிழக பாஜக மாநிலக் கட்சித் தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அண்ணாமலையின் கூற்று அதிமுக ஆதரவாளர்களிடையே பெரும் கோபத்தை தூண்டியுள்ளதாகவும், மாநிலத் தலைவருக்குக் கூட தகுதி இல்லாதவர் என காட்டமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எதிர் கட்சியை விமர்சிப்பதற்கு பதிலாக கூட்டணிக் கட்சியை இவ்வாறு மறைமுகமாக சாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றும், மேலும் இதனை பாஜக மேலிடம் கண்டிக்க வேண்டும். இல்லையேல் கூட்டணி தொடர்வது குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிகழும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது தேர்தல் நடைபெற்றாலும் 30 லோக்சபா தொகுதிகளில் அதிமுக வெல்லும், கர்நாடகாவில் உங்களைப்போல் புறம் தள்ளப்படாது என்றும் அரசியல் வரலாற்றில் அதிமுக ஆலமரம், ஆனால் பாஜகவோ செடி என்று அண்ணாமலையின் கருத்துகளுக்கு செய்தியாளர்களிடம் கடுமையாக விமர்சித்தார்.
ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதில் கூறும் விதமாக பாஜகவின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வரம்பு மீறிய பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K.அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படியாக பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். தினந்தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கள் மாநில தலைவர் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது.