சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது வழக்கு தொடரப்படுவதாகவும், அவர்கள் வஞ்சிக்கப்படும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை ஆய்வு செய்வதற்காக பாஜக தேசியத் தலைவர் நட்டா நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தார். இதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பால் சிங், பிசி மோகன் அடங்கிய குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.
வழக்கு தொடரப்பட்ட பாஜக நிர்வாகிகளிடம் தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் சென்று பாஜக மத்தியக் குழு விசாரணை மேற்கொண்டது. பனையூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லத்தின் முன் வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றும்போது ஏற்பட்ட தகராறில் பாஜக நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வாறு வழக்கு தொடரப்பட்ட பாஜக நிர்வாகிகளின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற பாஜக மத்திய குழுவினர், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்து விசாரணை செய்தனர். மேலும் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு, அங்குள்ள நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீது தொடரப்படும் வழக்குகள் குறித்தும், அவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பாஜக மத்திய குழு தமிழ்நாடு ஆளுநரிடம் விசாரணை மேற்கொள்ள புகார் அளித்தனர். பின்னர் சென்னை கமலாலயத்தில் பாஜக மத்திய குழுவின் ஆந்திர பாஜக மாநிலத் தலைவர் புரந்தேஷ்வரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “250 கட்சி நிர்வாகிகளிடம் நேற்று தொலைபேசி வாயிலாக பேசி உள்ளோம்.
அவர்கள் பட்ட துயரங்களை எங்களிடம் சொன்னார்கள். சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததற்காக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தின் மூலம் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மாற்றுக் கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது. ஆளுங்கட்சி, அண்ணாமலையின் பாதயாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறது.
பாஜக நிர்வாகிகள் மீது எஸ்சி, எஸ்டி வழக்குகள் போடுகிறார்கள். பாஜகவினர் மாற்று கட்சி நிர்வாகி மீது புகார் அளிக்கும்போது, அதனை காவல்துறையினர் ஏற்க மறுக்கின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லம் முன்பு வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு காவல்துறையினர் பாஜக நிர்வாகிகளை தாக்கியுள்ளனர். 6 பேர் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொடிக்கம்பம் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து சற்று தொலைவில் மசூதி உள்ளது. ஆனால், மசூதிக்கு எதிர்ப்புறமாகவே தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடியும், மற்றொரு கட்சியின் கொடியும் உள்ளது. மசூதியின் அருகில் கொடிக் கம்பங்கள் வைக்க கூடாது என்றால், ஏன் மற்ற கட்சியின் கொடிகளை மட்டும் வைக்க வேண்டும்? கொடிக்கம்ப பிரச்னை ஏற்பட்டபோது காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது ஏற்படுத்தப்படும் தாக்குதல் குறித்தும், அவர்கள் மீது தொடரப்படும் வழக்குகள் குறித்தும் அறிக்கையினை ஆளுநரிடம் கொடுத்து உள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவரது கட்சியினரை மட்டும்தான் பாதுகாக்கிறார். கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்தில் மசூதியைச் சார்ந்த நபர்கள் அன்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காவல் ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்ததும் தடியடி நடத்ததான் உத்தரவிட்டுள்ளார். பாஜக கொடி அங்கு வைப்பதற்கு அனுமதி இல்லை என்றால், மற்ற கட்சியின் கொடிகளை அங்கே வைப்பதற்கு அனுமதி முறையாக பெறப்பட்டுள்ளது என்பதை விசாரிக்க வேண்டும்” என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா செய்தியாளர் சந்திப்பில் பேசியது, “தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஒன்று கூற விரும்புகிறேன். பாஜக நிர்வாகிகளிடம் உங்களது அரசியல் ரீதியான விளையாட்டைக் காட்டாதீர்கள். கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவத்தன்று இரவு, மசூதியில் இருந்து ஆயுதங்களுடன் அப்பகுதியினர் வந்துள்ளனர். பாஜகவினரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என காவல்துறையினர் அவர்களிடம் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவினர் வஞ்சிக்கப்படுவதை தொடர்ந்து அனுமதிக்க மாட்டோம். இது குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கி உள்ளோம். கொடிக்கம்பம் குறித்த பிரச்னை நடந்து கொண்டிருந்த இடத்தில், பத்து நிமிடத்தில் காவல் ஆணையர் வந்துள்ளார். அவர் வரும் அளவிற்கு அங்கு எந்த பெரிய பிரச்னையும் ஏற்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு பாஜகவினர் மீது 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வந்த பதிவை Forward செய்ததற்காக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பிரதமர் குறித்து திமுகவினர் மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவு செய்வதை திமுக கண்டுகொள்ளவில்லை. கொடிக்கம்பம் வைப்பதற்கு காவல்துறையிடம் வாய்மொழியாக அனுமதி வாங்கப்பட்டுள்ளது. பாஜக கொடியை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றால், மற்ற கொடிகள் வைப்பதற்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கப்படுகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்” என கூறினார்
இதையும் படிங்க:ஆயுத பூஜை வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் சம்பவம்: வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்க தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை - ஆவடி காவல் ஆணையர்!