சென்னை:'சனாதனம்' குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் போன்ற 'இந்துத்துவா' அமைப்புகள் பலரும் (Udhayanidhi Stalin speech on Sanatan) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இவரின் இப்பேச்சுக்கு திமுகவினரும், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல அமைப்புகளும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று (செப்.4) வெளியிட்ட அறிக்கையில், 'இது சமய நம்பிக்கையை இழிவு செய்யும் நோக்கம் கொண்டதல்ல என்பதை சாதாரண அறிவுள்ளோரும் அறிவர். ஆனால் பாஜகவும், சங் பரிவார் கும்பலும் உதயநிதி ஸ்டாலின் இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக பச்சை புளுகு மூட்டை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் தனிநபர் மையப்பட்ட சர்வாதிகார கட்டமைப்பை ஏற்படுத்தும் வஞ்சக செயலில் ஈடுபட்டு வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக 'INDIA' கூட்டணி நாடு முழுவதும் தீவிரமான இயக்கங்களை மேற்கொண்டு முறியடிக்கும் என்பதை வரலாறு உறுதி செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
பாஜகவின் விஷமப் பிரசாரம்; மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்:இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், 'இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கும்போது பேசிய கருத்துக்களை திரித்தும் சிதைத்தும் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் விஷமப் பிரசாரம் செய்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் துவங்கி பாஜகவின் நட்டா, அண்ணாமலை வரை ஒரே குரலில் பொய்யுரைக்கின்றனர்' என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷனண் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த மாநாடு 'இந்து' மதத்திற்கு எதிராக நடத்தப்படவில்லை. மாறாக, சனாதனம், மனுநீதி, வர்ணாசிரமம் என்ற பெயரில் காலம் காலமாக திணிக்கப்படும் சாதிய மேலாதிக்கம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை எதிர்த்தே நடத்தப்பட்டது. மக்களை சாதி ரீதியாக பிரித்து தனித்தனியாக இருக்க வேண்டும் என்று சொன்னதுதான் 'சனாதனம்' என்றும் அதைத்தான் இவர்கள் தவறாக சித்தரித்துகளை தெரிவித்து வருவதாக' தெரிவித்துள்ளார்.
சாதிய படிநிலை சமூகத்திற்கான குறியீடே இந்த 'சனாதனம்':மேலும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில், 'அமைச்சர் உதயநிதி பேசியதை நான் கேட்டேன். அவர் தவறுதலாக எந்த கருத்தையும் பதிவிடவில்லை எனவும் மாறாக, அவர் கூறிய கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டு கூறப்படுவதாக' கூறியுள்ளார்.
'சனாதன தர்மம் என்பது சாதிய படிநிலை சமூகத்திற்கான குறியீடே தவிர வேறில்லை எனவும் தமிழகத்தில் பொதுவான பேச்சுவார்த்தையில் “சனாதன தர்மம்” என்றால் சாதி படிநிலை சமூகம். ஏன் என்றால் "SD"-க்காக செய்யும் அனைவரும் "படிநிலை"யின் பயனாளிகளான சலுகை பெற்றப் பிரிவைச் சேர்ந்தவர்கள், யாருக்கும் எதிராக "இனப்படுகொலைக்கு" அழைப்பு விடுக்கவில்லை' எனவும் பதிவிட்டிருந்தார்.
கி.வீரமணி கண்டனம்:இது தொடர்பாக திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், 'உதயநிதி பேசிய கருத்து குறித்து இவர்கள் பேசி வருவது "ஜமுக்காளத்தில் வடிகட்டிய பச்சைப் பொய் மூட்டை" என குற்றசாட்டியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஏதோ இனப்படுகொலை (Genocide) செய்யச் சொன்னதுபோல, பல சமூக ஊடகங்களாலும், நாட்டின் பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களாலும் திட்டமிட்டு திரித்துப் பரப்பப்பட்டு வருவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பாஜகவிற்கு விஷமத்தனம் கைவந்த கலை: திரிபுவாதம் கலை என்பது பா.ஜ.க.வினருக்கு கைவந்த கலையே! என்றும் கருத்தைக் கருத்தால் சந்தித்து களமாடுவதுதான் கழகங்களின் பணியே தவிர, வன்முறை வெறுப்புக் காரியத்தில் மக்களை இழுத்துவிடுவதல்ல! என்றும் எதிர்க்கட்சிகளின் எழுத்துகளை, உரைகளை வெட்டியும், ஒட்டியும் பொருந்தாதவையை பொருந்த வைத்து, விஷமத்தனம் செய்வது பா.ஜ.க.வின் அன்றாட திரிபு வேலை என்றும் சாடியுள்ளார். அதற்குத்தான் பலரை ஒரு பட்டாளமாக திரட்டி பணி செய்ய வைத்து, உண்மைகளை களப் பலியாக்கி, அதில் வெற்றி காணலாம் என்பது காவிகளின் சர்வ சாதாரணமான தினப்பணியே! என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
பூச்சாண்டிக்கெல்லாம் திராவிட இயக்கத்தினர் பயப்படுவதில்லை:அதுபோலவேதான், அமைச்சர் உதயநிதி பேச்சின்மீதான திரிபுவாதம்! என்றும் இதுமாதிரி பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவது திராவிட இயக்கத்தின் ரத்த ஓட்டத்தில் என்றுமே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். பேதத்தை ஒழிப்பது குற்றமா? சாதி ஒழிப்பு என்றால் சாதிக்காரர்களைக் கொல்லுவது என்று பொருளாகுமா? என்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு என்றால், மூடநம்பிக்கையாளர்களை சாகடிப்பது என்று பொருளாகுமா? என்றும் ஏழ்மை ஒழிப்பு என்றால், செல்வந்தர்களைத் தீர்த்துக் கட்டுவது என்று பொருளாகுமா? என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
சரக்கு இல்லாதவர்களே திரிபுவாதத்தையும், மதவாதத்தையும் கையில் எடுப்பார்கள்:அதேபோல், சனாதன அழிப்பு என்றால், பிறப்பில் பேதம் பேசும் வருணாசிரம தர்மத்தை ஒழிப்பது என்று பொருள் - சமதர்மத்தை - சமத்துவத்தை வளர்ப்பது என்று பொருள் என்றும் மாறாக, ஆளைக் கொல்லுவதல்ல என்றும் கூறியுள்ளார். பேதத்தை ஒழிக்கும் கருத்தின் அடிப்படையில்தான், உதயநிதி ஸ்டாலின் பேசியதாகவும், தேர்தலில் மக்களை சந்திக்கக் கைவசம் வேறு சரக்கு இல்லாதவர்கள், திரிபுவாத - மதவாத ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள்; அந்தோ பரிதாபம்' என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சரண்டர்; அரசியல் நெருக்கடி காரணமா?-அண்ணாமலை பேட்டி!